Breaking News

மக்களின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கின்றோம்: மாவை



தமது மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்துமாறு வலி.வடக்கு மக்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கை நியாயமானது எனவும், இதற்கு கூட்டமைப்பு பூரண ஆதரவளிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆறு மாதத்திற்குள் வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) வலி.வடக்கு மக்களினால் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த கண்டன பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு எமது மக்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர் என்பதனை யாராலும் மறக்க முடியாது.

இந்தநிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் மாத்திரமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் வாக்குறுதியளித்துள்ளார்.

எனினும் அந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பில் நாம் ஐ.நா ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

அத்துடன், இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியிருந்தார்’ என தெரிவித்துள்ளார்.