Breaking News

சர்வதேசத்துடன் சமரசம் செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம்



இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது உள்ளக விசாரணை பொறிமுறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்தும், அது தொடர்பில் சர்வதேச சமூகம் திருப்திகொள்ள முடியுமா? முடியாதா என்பது தொடர்பாகவும் செய்ட் அல்ஹுசேன் தனது வாய்மூல அறிக்கையில் தெளிவுபடுத்தவுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.

முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசேன் இலங்கை, நீதி வழங்கும் செயற்பாடு தொடர்பான பொறிமுறையின் உபாய மார்க்கத்தை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசேன், சர்வதேச நீதிபதிகளை கொண்டுவருவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாடானது நம்பிக்கை தருவதாக அமைய வேண்டுமெனவும் செயிட் அல்ஹூசேன் கூறியிருந்தார். இந்நிலையிலேயே எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளன.

இந்நிலையில், பொறுப்புக் கூறல் விடயத்தில் பாரிய முன்னேற்றம் ஏதுவும் எட்டப்படாத நிலையில் குறித்த கூட்டத் தொடரினை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மற்றும் இலங்கை விவகாரத்தில் அக்கறையுள்ள சர்வதேசப் பிரதிநிதிகள் ஆகியோரை சமரசப்படுத்தி கால அவகாசம் பெற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.