இன்னமும் உயிர் அச்சுறுத்தல் - கோத்தா புலம்பல்
தனக்கு இன்னமும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ குறிப்பிட்ட தரப்புகளினால் எனது உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக நம்புகிறேன்.
எனவே, எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்குப் பதிலாக, காவல்துறையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலரை கேட்டுக் கொள்கிறேன்.
என் மீது குண்டுத் தாக்குதல் நடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பதற்கு நான் தயாராக இல்லை.
நான்கு கைதிகளையும், பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது அரசாங்கத்தின் வேலை. ஆனால் அவர்களை மன்னிக்க நான் தயாரில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.