வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை – சுமந்திரன்
கடந்த வருடம் இலங்கையின் சம்மதத்துடன் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பல விடயங்களை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தாலும், அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த தீர்மானத்திலுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதை ஐ.நாவிடம் தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.நாவின் 32 ஆவது அமர்வு, எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஒழு குழுவினர் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வந்தாலும், இலகுவாக நிறைவேற்றப்படக்கூடிய விடயங்களான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, மேலதிகமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையும் நடந்தேறி வருவதாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடம் உண்மை நிலையை எடுத்துரைக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.