Breaking News

விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்



பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் சிறிலங்கா விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிடவுள்ளார்.

நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வெளியிடவுள்ள வாய்மூல அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, நேற்று பின்னிரவில் ஜெனிவாவில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையிலேயே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், பொறுப்புக்கூறல் விசாரணைகளின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை உறுதிப்படுத்த அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

“இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஆற்றாமை மற்றும் ஏக்கத்தை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கண்டபடி கைது செய்யப்படுதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, பொதுவான இராணுவ கண்காணிப்பு, துன்புறுத்தல், போன்ற தொடர்ந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு, சிறிலங்கா அரசாங்கம் விரைவாக தீர்வு காண வேண்டும். இவற்றை ஊக்குவிக்கும் கட்டமைக்கப்பட்ட நிறுவனமயப்படுடுத்தப்பட்ட கலாசாரத்தை கைவிட வேண்டும்.

பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறு கால நீதி, மனித உரிமைகள் போன்ற முக்கியமான விவகாரங்களை, அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் முறைகளுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது என்று நம்புகிறேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவும், ஊக்கமும், எல்லா பங்காளர்களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கும், உறுதியையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.

கொத்தணிக் குண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அண்மையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, முழுமையான சுதந்திரமான- நடுநிலையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போது குறைந்தளவிலேயே நம்பிக்கையைக் கொண்டுள்ள சிறிலங்காவின் நீதித்துறை நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் கண்களுக்கு சுதந்திரமான, நடுநிலையான செயற்பாடுகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளிக்கும்.

விசாரணைகளில் அனைத்துலக மீறல்கள் குறித்த குற்றச்சாட்டைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகளில், கண்டறியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றிருக்கக் கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இராணுவமயமாக்கல் பற்றிய கரிசனைகள் முக்கியமான ஒரு சவாலாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும், சிறிலங்கா இராணுவத்தின் தலையீடுகள் இன்னமும் அதிகளவில் உள்ளன. கண்காணிப்பு கலாசாரம், அச்சுறுத்துதல், துன்புறுத்துதல் என்பன நீடிக்கின்றன.

சிறிலங்காவில் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விவகாரம், தமிழ் சமூகத்துக்கு பிரதான கவலையாக உள்ளது.

கண்டபடியும், முறையான சட்ட வழிமுறைகளின்றியும் கைதுகள் தொடர்கின்றன. இது சமூகத்தில் அச்சத்தையும், அரசாங்கத்தின் முயற்சிகளின் மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும்.

வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கு வேகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

சுற்றுலா, விவசாயம் போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவத்தின் ஈடுபடுவது, பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் பெரும் ஏமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.