ஜெனிவாவில் மங்கள சமரவீர – இலங்கை அரசின் நிலைப்பாட்டை இன்று விளக்குவார்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளார்.
நோர்வே, உக்ரேன் பயணங்களை முடித்துக் கொண்டு ஜெனிவா வந்தடைந்த மங்கள சமரவீர, நேற்று பேரவைக் கூட்டத்தொடரில் பக்க நிகழ்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு உப மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
அதேவேளை,இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும், பேரவையின் கூட்டத்தொடர்களில் பங்கேற்கவுள்ளார்.
அவர் இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தஇலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், சுருக்கமான விளக்கம் ஒன்றை அளிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவுளை, ஐ.நாவுக்கானஇலங்கையின் நிரந்தரப் பணியகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள உப மாநாடு ஒன்றில், இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் விளக்கமளிக்கப்படவுள்ளது. இதில் மங்கள சமரவீர கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
நாளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியான பின்னரும், அதற்குப் பதிலளித்து மங்கள சமரவீர உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.