வட்டக்கச்சியில் மீண்டும் தங்க வேட்டையில் பொலிஸார்
கிளிநொச்சி – வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழி ஒன்று தோண்டப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தங்கம் மற்றும் வெடிபொருட்கள் காணப்படுவதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி காணப்பட்டதாக கூறப்படும் குறித்த பகுதியில், 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்தனர்.
எனினும் இராணுவத்தின் முகாம் இடமாற்றப்பட்டதையடுத்து கடந்த மே மாதம் 29 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் கடந்த 1ஆம் திகதி அடையாளந் தெரியாதோரால் குழி ஒன்று தோண்டப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, அவர்கள் குறித்த இடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே மீண்டும் இந்த தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.