வடக்கில் காணிகளை முழுமையாக விடுவிக்க முடியாது - யாழில் பாதுகாப்பு செயலாளர்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் சகல காணிகளையும் விடுவிப்பது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) யாழ் காங்கேசன்துறையில் இடம்பெற்ற காணிவிடுவிப்பு நிகழ்வின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘முப்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று காணிகள் விடுவிக்ப்பட்டதைப்போன்று இன்னும் சில தினங்களில் மேலும் சில காணிகளை விடுவிக்கவுள்ளோம்.
விடுவிக்கப்படுவதற்கு ஏதுவான காணிகளை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக அதனை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இதற்கு நீண்டநாட்கள் ஆகாது என நான் நினைக்கின்றேன். எனினும் சகல காணிகளையும் விடுவிக்க முடியாது. பாதுகாப்பின் காரணமாக சில காணிகளை நாம் தொடர்ந்து எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்
பாதுகாப்பின் நிமித்தம் சில காணிகளை விடுவிப்பது சாத்தியமற்று உள்ளது. எத்தனை ஏக்கர் அவ்வாறு விடுவிக்கமடியாமல்போகும் என்பது குறித்து என்னால் கூறமுடியாது. அவ்வாறான காணிகளின் உரிமையாளர்களிற்கான இழப்பீடுகள் நிச்சயம் வழங்கப்படும்.
யாழ் மாவட்டத்தில் ஒருகாலத்தில் 29ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை விடுவிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் காணிகளே இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.’ என்றும் கூறினார்.