யாழில் நிரந்தரமாக்கப்படும் இராணுவ முகாம்
வலி.கிழக்கு வசாவிளான்–ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டுவரும் இராணுவ முகாமினால் அப்பகுதி வாழ் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
வசாவிளான் – ஒட்டகப்புலம் மற்றும் அதனை அண்டிய பகுதியும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் பொதுமக்களிடம் ஒப்படைப்பட்டன. எனினும் ஒட்டகப்புலம் பகுதி முழுமையாக இராணுவத்தின்வசமே இருந்து வருகின்றது.
ஒட்டகப்புலத்தில் அமைந்துள்ள மாதா கோவிலுக்கு மட்டும் மக்கள் சென்றுவர அனுமதியளித்த படையினர் குறித்த பகுதியில் உள்ள இராணுவ முகாமை நிரந்தரமாக அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது இடம்பெயர்ந்த மக்கள் 6 மாத காலத்துக்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அப்பகுதிகளில் இராணுவ முகாம் நிரந்தரமாக அமைக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் இராணுவத்தின் தற்காலிக படை முகாம்கள் நிரந்தரமாக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் வருகின்றன. இதனால் இராணுவத்தின் வசமுள்ள பொது மக்களது ஏனைய நிலங்கள் விடுவிக்கப்படுமா என்ற ஏக்கம் காணி உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
வசாவிளான் ஒட்டகப்புலத்திலுள்ள முறிவு நெறிவு வைத்தியசாலை அமைந்துள்ள காணிக்கு அருகாமையிலுள்ள இராணுவ முகாமே பாரிய கொங்கிறீட் வளைவுகளுடன் சீமெந்தினால் கட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் ஒட்டகப்புலம் பாடசாலை, ஒட்டகப்புலம் முறிவு நெறிவு வைத்தியசாலை, ஒட்டகப்புலம் தேவாலயம் என்பன அமைந்துள்ளன. அத்துடன் இவற்றுக்கு அருகில் பொதுமக்கள் மீள் குடியேற ஆரம்பித்துள்ள நிலையில், தமக்கான வீடுகளினையும் நிர்மாணிக்க ஆரம் பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.