இந்தியப் பிரதமர் மோடிக்கு முதல்வர் விக்கியின் தத்துவ உபதேசம்
சின்முத்திரை என்றொரு குறியீட்டு உபதேசம் இந்து சமயத்தில் உண்டு. குறியீட்டு மொழிகளே மிகப்பெரும் தத்துவங்களாக-தத்துவ சாரங்களாக இருந்து வந்துள்ளன.
சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமரர் என்ற நான்கு முனிவருக்கும் சிவபெருமான் கல்லால் மர நிழலின் கீழ் இருந்து ஞான உபதேசம் செய்கிறார்.
உபதேசம் என்பதால் சிவபெருமான் தெட்சணாமூர்த்தி வடிவத்தை தாங்கிக் கொள்கிறார். உபதேசம் சின்முத்திரையாகவே இருக்கின்றன. ஆக, சின்முத்திரைகள் மிகப் பெரும் தத்துவத்தைத் தருவன. ஆடலரசனாகிய நடராசப் பெருமானின் திருநடனம் குறியீட்டு வழி பொருள் உணர்த்துவதாகும்.
ஆக, மனித மொழிகளில் உலகம் முழுவதையும் இணைக்கக் கூடியது குறியீட்டு மொழி. குறியீட்டு மொழியின் உணர்தன்மை எல்லோருக்கும் பொருத்துடையதன்று. சின்முத்திரைகளை புரிந்து கொள்ளாதவர்கள் குறியீட்டு மொழிகளை புரிதலில் இடர்படுவர்.
எதுவாயினும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகச் சிறந்த இறை பக்தி உடையவர். நவராத்திரி காலத்தின் போது அமெரிக்கா சென்ற அவர், வெறும் பச்சைத் தண்ணி தவிர்ந்த வேறு எதையும் உண்டிலர். அந்தளவிற்கு கடும் விரதம் அனுஷ்டித்தவர்.
எனவே அவருக்கு சின்முத்திரை நன்கு புரியும் - அதன்வழியான தத்துவங்களும் நன்கு விளங்கும். வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் மீள் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார். இந்திய அரசின் நிதி உதவியில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்புச் செய்யப்பட்டதால் இந் நிகழ்வுகள் யாவற்றையும் இந்தியப் பிரதமர் மோடி தன் அலுவலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் கண்டு கொண்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அரங்கேறிய வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கால் இடறி தடக்கி கீழே விழுகின்ற நிலைமைக்குச் சென்றிருந்தார்.
முதலமைச்சரின் இந்த நிலைமை அங்கிருந்த ஜனாதிபதி உள்ளிட்ட பலரையும் பதற்றமுறச் செய்தது. இருந்தும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் இடறல் இந்தியப் பிரதமருக்கு மிகப் பெரியதொரு தத்துவத்தை குறியீட்டு மொழியாக உணர்த்துவதாகும்.
அதாவது இந்தியாவை நம்புங்கள் என்று முன்பு நீங்கள் சொன்னீர்களே! உங்கள் வார்த்தைக்கு என்னவாயிற்று? தமிழன் பிடிமானம் இல்லாததால் கால் இடறி விழவேண்டியதாயிற்றுப் பார்த்தீர்களா? காணொலியில் இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் எப்படி நாங்கள் விழாமல் பிடிக்கமுடியும்.
இங்கு நடப்பதை நேரில் வந்துபார்க்க வேண்டும். காணொலி பிடிப்பதைத்தான் காட்டும். நான் மேடையில் தடக்கி விழுவதால் தமிழனின் நிலைமை தற்செயலாக உங்களுக்குத் தெரிகிறதே தவிர எம் இனம் வீழ்ந்தது பற்றி நீங்கள் முழுமையாக அறியவில்லை.
ஆகையால் எந்தப் பிடிமானமும் இல்லாத ஈழத் தமிழனுக்கு விளையாட்டரங்கிலும் விழுகை தான் முடிபு. எனவே, முதலில் உரிமையைப் பெற்றுத்தாருங்கள். அதன் பின் இந்த அரங்கில் தமிழன் விழாமல் விளையாடுவான் என்பதை உணருங்கள் என்ற தத்துவத்தை பிரதமர் மோடிக்கு உணர்த்துவதே வடக்கு முதல்வரின் கால் இடறலாகும் என்று உணர்க.