எமது நிலத்தை எம்மிடம் வழங்க முடியாது என கூறுவதற்கு இராணுவத்தினர் யார்?
எமது நிலத்தை எம்மிடம் வழங்க முடியாது என கூறுவதற்கு இராணுவத்தினர் யார் எமது மக்களின் வாக்கினைப் பெற்ற ஜனாதிபதியே பதில் கூறவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ். நடேஸ்வரக் கல்லூரி நேற்னைய தினம் திறந்து வைக்கப்பட்டபோது அதில். கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
எமது மயிலிட்டி மக்களின் நிலத்தை எம்மிடம் வழங்க முடியாது என்று இராணுவத்தினர் கூறுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலங்களை வழங்க முடியாது எனக் கூற அவர்கள்யார்.
எமது மக்களிற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி ஓர் தெளிவான வாக்குறிதியினை வழங்கினார். அதாவது நிலத்தின் உரிமையாளர்களிற்கே நிலம் சொந்தம் என்றார்.அதனை நம்பியே எமது மக்கள் வாக்களித்தனர்.
இதன் பிரகாரம் இந்த விடயம் தொடர்பில் எமது வாக்கினைப் பெற்ற ஜனாதிபதியே பதில் கூறவேண்டும் .
எமது மக்களின் நில விடுவிப்புத் தொடர்பில் நாம் பல கட்ட பேச்சுக்களை ஜனாதிபதியுன் பேசியுள்ளோம். அதன் பிரகாரம் இந்த மாதம் 12ம் திகதிவரைக்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் கேட்டிருந்தார்.
அதனால் அதுவரை பொறுத்திருப்போம். இது தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமும் அவசரமாக கோரியுள்ளேன்.
இன்று விடுவிக்கப்பட்ட இந்தப் பாடசாலைக்காகவும் இதனோடு இணைந்த பிரதேசங்களிற்காகவும் நாம் நடாத்திய போராட்டங்கள் ஒன்று இரண்டு அல்ல அத்துடன் ஐ.நா வரைக்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு எமக்களித்த வாக்குறுதியின் பிரகாரம் எமது மக்களின் வாழ்விடம் ஒப்படைக்கப்படாது போனால் எமக்கு வேறு மார்க்கம் இல்லை.
இந்த விடயத்தினை மீண்டும் சர்வதேசத்தின் கவணத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமன்றி மக்களின் நில விடுவிப்பிற்கான போராட்டங்களை தவிர எமக்கு மாற்றுவழியில்லை.அந்த வடிவம் பின்னர் அறியத் தரப்படும்.
இந்தப்பகுதியில் உள்ள ஆலயங்கள் பாடசாலைகளை விட வேண்டும் என நாம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக வழக்குத்தாக்கல் செய்துள்ளோம். அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட இடங்களாக 57 இடங்கள் உள்ளன.
இதேவேளை இப்பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் உற்சவத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் வருகை தந்தார்.அவரை நாம் மாலைபோட்டு , தலைப்பா வைத்து , கட்டிஅணைத்தோ வரவேற்கவில்லை. கை கொடுத்து வரவேற்றோம்.
மயிலிட்டி பிரதேசங்களை விடுவிப்பதானால் பலாலி விமான நிலையத்தினை தரமுயர்த்த முடியாது. என முன்னர் கூறிவந்தனர் ஆனால் இந்தியாவில் இருந்து வந்த வல்லுனர்கள் பலாலி விமான நிலையத்தின் தற்போதைய விஸ்திரத்துடனேயே தரமுயர்த்த முடியும் எனக் கூறி அக்கருத்திற்பும் முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதன்பிற்பாடு அதற்கு அண்மைய பிரதேசத்தில் பாரிய ஆயுதங்கள் உண்டு எனக் கூறுகின்றனர். பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை மக்கள் வாழ் பகுதிகளிற்கு அண்மையில் ஏன் வைத்திருக்க வேண்டும். அத்தோடு பாரிய அழிவு ஆயுதம் எனில் அது அணுக்குண்டுதான் அவ்வாறானால் இங்கு என்ன அணுக்குண்டினையா வைத்திருக்கின்றீர்கள் .
எவ்வாறாயினும் குறக்கப்பட்ட காலத்தில் எமது மக்களின் பிரதேசங்கள் மக்களிடமே வழங்கபட வேண்டும். என்றார்.