Breaking News

நோர்வே விசேட தூதுக்குழு இன்று யாழ். விஜயம்



நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் டோரே ஹட்ரிம் தலைமையிலான நோர்வே தூதுக் குழுவொன்று இன்று யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தில் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் டோபியன் கவ்ஸ்ட்டேவிடர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக இலங்கையிலுள்ள நித்திய பிரதிநிதி பீட்டர் பெடலர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐ.நா. வின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் இணைந்த நோர்வே அரசு யாழ். மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்டுள்ள இடங்களில் 1200 குடும்பங்களின் மீள்குடியேற்றத்துக்கு இலங்கை அரசாங்கத்துக்கு உதவி வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (31) இலங்கை வந்துள்ள நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை (02) வரையில் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.