Breaking News

பிரபாகரன் நினைத்திருந்தால் மஹிந்த என்பவர் இன்று இல்லை!



தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று சரியான முடிவை எடுத்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார் எனவும், பிரபாகரனின் முடிவு மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவும் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடையவும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் காரணம்.

அவர் அன்று சிந்தித்திருந்தால் இன்று மஹிந்த ராஜபக்ஷ என்று ஒரு தனி மனிதர் இலங்கை அரசியலுக்கு அடையாளம் தெரியாத ஒருவராக இருந்திருப்பார். இன்று தம்மை மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகள் எனவும் தாம் கூட்டு எதிரணியினர் எனவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் எவரும் அன்று மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த போது அவருடன் இருக்கவில்லை. அன்றும் இன்றும் நாம் மட்டுமே அவருடன் கைகோர்த்து செயற்பட்டு வருகின்றோம்.

பஸில் ராஜபக்ஷவும் அவருடன் இருக்கின்ற ஏனைய ராஜபக்ஷக்களும் தான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் மஹிந்தவின் தோல்விக்கு காரணம் ஆகும். இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தமக்கு ஏற்றவாறு கட்சிகளை அமைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் அந்த கட்சி சிறிது காலத்தில் காணாமல் போய் விடும் எனபது அவர்களுக்கு புரிய வில்லை. உண்மையில் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தது யார்? மாகாண சபை அமைச்சர்களோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் எவரும் அல்ல? நாமும் அல்ல! நாம் அனைவரும் அன்று வாக்களித்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் தான்.

ஆனால் ராஜபக்ஷக்கள் அவ்வாறு வாக்களித்தார்களா என்பது தெரியாது அவர்களால் தான் மஹிந்த தேர்தலில் தோற்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேம சந்திரனின் இறப்புக்கு பின்னரே மஹிந்தவின் தோல்வி உறுதியான ஒன்றாக ஆக்கப்பட்டது. அதற்கு காரணம் நாமா? இல்லை, இன்று மஹிந்தவின் வால் பிடித்து திரியும் கூட்டு எதிரணியும் ராஜபக்ஷக்களும் தான்.

கூட்டு எதிர்கட்சிக்கு முதுகெலும்பு கிடையாது. அந்த கட்சியால் இன்னும் சில நாட்களுக்கு தான் அரசியலில் நிலைக்க முடியுமே தவிர நிரந்தரமாக நிலைக்க முடியாது. மக்கள் நிலைக்கவும் விட மாட்டார்கள்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கல் என்று சிலர் கூறிவருகின்றனர். இது ஒரு அரசியல் பழி வாங்கல் இல்லை என அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் என்ற ரீதியில் நாம் கூறுகின்றோம் சட்டம் தன் கடமையை செய்கிறது’ என தெரிவித்துள்ளார்.