ஜனாதிபதி எந்தப்பக்கம்? 30 ஆம் திகதி தெரியும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவரரா? அல்லது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரா? என்பதை பொது மக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி தெரிந்துக்கொள்வார்கள். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவி நீடிப்பிற்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி 24 ஆம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை நடத்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் சர்வதேச கடன் 2014 ஆம் ஆண்டை விட 1010 வீததத்தால் அதிகரித்துள்ளது. முறையற்ற நிதி நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை படுபாதாளத்தில் தள்ளிய மத்திய வங்கி ஆளுநரின் பதவியை நீடிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஸ்ரம பௌத்த நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மத்திய வங்கியின் 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் 190 ஆவது பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டில் தேசிய கடன் 20.4 பில்லியனாக காணப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டில் இந்த கடன் தொகை 222.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதாவது 1010 வீதமாக சர்வதேசத்திற்கான தேசிய கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் பிரகாரம் தேசிய நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே காணப்படுகின்றது.
இந்நிலையில் மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனை நீடிக்க கூடாது என வலியுறுத்தி 24 ஆம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார்.