சித்திரவதைகள் இடம்பெறுகின்றன - ஏற்றுக்கொண்டார் மங்கள
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக் கொண்டார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைனால், இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளுக்கான வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றும் போதே, அமைச்சர் மங்கள இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சருக்கு வழங்கப்பட்ட 5 நிமிடங்களில் குறிப்பிடத்தக்க அளவை, இலங்கையின் அண்மைக்கால அடைவுகள் குறித்து வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்திய அமைச்சர் மங்கள, இலங்கையின் தேசிய அரசாங்கம், இவ்வாண்டு ஓகஸ்டில் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் போது, 'ஒரு வகையான திருப்தியுடன், பல அடைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கக்கூடியதாக இருக்கும்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடவடிக்கைகளான நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒழுங்குபடுத்துதல் செயலகத்தின் உருவாக்கம், சிவில் சமூகப் பிரதிநிதிகளை முழுவதுமாகக் கொண்ட செயலணியொன்றின் உருவாக்கம், தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம், காணாமல் போனோருக்கான நிரந்தரமானதும் சுயாதீனமானதுமான அலுவலகத்தை உருவாக்குவதற்கான வரைவுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம், காணாமல் போனமைக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்டத் திருத்தம் உள்ளிட்ட விடயங்களை, மேற்கோளிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொண்டார். 'மிகவும் விமர்சிக்கப்படுவதும் அதிகமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு, முதல் வரைவின் இறுதிக் கட்டத்தில், செயற்குழுவொன்று ஈடுபட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.
சித்திரவதைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், 'சித்திரவதை தொடர்பாக முழுமையான எதிர்ப்பான கொள்கையை அரசாங்கம் கொண்டுள்ள போதிலும், அது இடம்பெறுவது இல்லாமல் போகவில்லை, ஆனால் குறைவடைந்துள்ளது. இதன் தீவிரத் தன்மையை நாம் உணர்ந்துள்ளோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொதுக் கலந்துரையாடலை ஏற்படுத்தவும், இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவினதும் உதவியும் பெறப்பட்டுள்ளன' என்றார்.
காணிகள் விடுவிப்புத் தொடர்பாக உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்திலுள்ள 701 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 201.3 ஏக்கர் காணிகள், 25ஆம் திகதி, அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகள் அனைத்தையும், 2018ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென, இராணுவத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, தேசிய தேவைகளுக்காகவோ அல்லது அபிவிருத்தித் தேவைகளுக்காகவோ தேவைப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு, முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். உயர்ஸ்தானிகரின் உரையில், இலங்கையின் நீதிப் பொறிமுறையில், சர்வதேசத்தின் பங்களிப்புக் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், அது குறித்தும் அமைச்சரின் உரையில் கவனம் செலுத்தப்பட்டது.
'சர்வதேச உதவியுடன் கூடிய நீதிப் பொறிமுறையை உருவாக்கும் காத்திரமானதும் சர்ச்சைக்குரியதுமான விடயம் தொடர்பாக, எங்களிடம் உத்திகளும் திட்டங்களும் உள்ளன. எங்களோடு இணைந்து வெளிநாட்டுப் புலனாய்வாளர்களும் தடயவியல் நிபுணர்களும் பணியாற்றியுள்ள நிலையில், சர்வதேச உதவிகளோ அல்லது சர்வதேசப் பங்கெடுப்போ எங்களுக்குப் புதிதில்லை. சர்வதேசப் பங்கெடுப்பின் தன்மை, மட்டம், பங்கு குறித்து பல்வேறு பார்வைகள் காணப்படுகின்றன தான்' எனத் தெரிவித்த அமைச்சர், பல்வேறான பார்வைகள் காணப்படுவது, ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒரு பண்பு எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை மீது கரிசனை கொண்டிருக்கின்ற, இலங்கை மீது சரியாகவோ அல்லது பிழையாகவோ விமர்சனங்களை முன்வைக்கின்ற நாடுகள் அனைத்தையும் இலங்கைக்கு வருமாறும், தனது உரையில் அழைப்பு விடுத்த அமைச்சர் மங்கள, இலங்கையானது உலகத்துக்காகத் திறந்திருப்பதாகவும், இலங்கைக்கு வந்து பார்க்குமாறும் தெரிவித்ததோடு, வரலாற்றுரீதியான இந்தப் பயணத்தில் உதவுமாறும் கோரினார்.
இவ்வாண்டு பெப்ரவரியில், உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைனை இலங்கையில் வரவேற்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், இவ்வாண்டு முடிவில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கு வருவாரென நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.