வலி. வடக்கில் 138 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு?
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய காணிகளை மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நாளை 25ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் 138 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதன்படி குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் முறையே ஜே-238, ஜே-242 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் சுமார் 126 ஏக்கர் நிலத்தையும், வறுத்தலை விளான் பகுதியில் (ஜே-241) 12 ஏக்கர் நிலத்தையும் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேற்படி பகுதிகளில் வாழ்ந்த மக்களை நாளை காலை 9 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு வருகை தருமாறும், அதற்கு முன்னதாக தங்கள் கிராமசேகர்கள் ஊடாக வருகையை உறுதிப்படுத்துமாறும் கேட்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியும் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளதாகவும், எனினும் அந்த தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் கூறப்படும் அதேவேளை, யாழ். வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றைய பகுதிகளின் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாக படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.