தமிழ்க் கைதிகளை மன்னிக்கமுடியாது: கோட்டா
தன் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவினர் என்ற குற்றஞ்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாதென்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில்-2 பித்தளை சந்தியில், 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 1ஆம் திகதியன்று காலை 10:30 மணியளவில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பயணித்த வாகனத் தொடரணியை இலக்குவைத்து, தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு உதவியதாக நான்கு தமிழர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் நேற்றைய விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தன் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நோக்கம், தனக்கு இல்லை. சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், பொது மன்னிப்பு வழங்குவது குறித்து, அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.