விடுதலையாகும் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்!
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகிய முன்னாள் புலி உறுப்பினர்களில் இதுவரை 103 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து ள்ளார்கள் என தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ஒருவரின் மனைவி. அத்துடன் சிறையில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் அனைவரையும் சர்வதேச மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
காணாமற்போனவர்களை வெளிப்படுத்தக் கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நேற்று முன்தினம் தினம் நல்லூர் ஆலய முன்றலில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் நாம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போது “ஒருநாள் போராளிகளாக இருந்தாலும் தம்மிடம் வந்து சரணடையுமாறு இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது. அதற்கமைய 2 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட போராளிகளை வட்டுவாகலில் வைத்து நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம்.
ஆனால் இதுவரை உயிரோடு ஒப்படைத்தவர்களின் முடிவும் வரவில்லை. காணாமல் போனவர்களின் முடிவும் எமக்கு கிடைக்கவில்லை. அனைவரையும் நம்பி ஏமாந்து விட்டோம். எனவே இதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே சரியான தீர்வு ஆகும். அதிலும் பாதிக்கப்பட்ட இடத்தில் தான் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
மேலும் விடுதலைப் புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு பின் விடுதலை செய்வதற்கு முதல் நாட்களில் சர்வதேச மருத்துவர்களால் அவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எந்த விதமான நோய்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் விடுதலையாகிய முன்னாள் போராளிகள் 103 பேர் சந்தேகத்துக்கிடமான நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அரசாங்கம் அதை மூடி மறைக்கிறது. எனவே இலங்கை மருத்துவர்கள் முன்னாள் போராளிகளை பரிசோதிப்பதை விடுத்து சர்வதேச மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
எமது உறவுகளுக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் எமது வாழ்நாளை கழிக்கிறோம். எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நீதியான செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேசம் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.