பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பத்தாண்டு சிறை: இளஞ்செழியன் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக விரோதக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கையிலேயே, நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு கடுமையாக எச்சரித்துள்ளார்.
இளஞ்செழியனின் எச்சரிக்கை அறிவுறுத்தல்களில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் வதை அல்லது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிப்பதற்கு தண்டனைச் சட்டக் கோவையின் 365 பிரிவில் சட்டம் பரிந்துரை செய்கின்றது.
மாணவிகள் மீது குற்றம் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்படும் ஆசிரியர்கள் விசாரணைகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டால், அவர்களுக்கு ஈவிரக்கமின்றி, இவ்வாறாக கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
அதேவேளை, குற்றச்செயல்களை மறைப்பதற்கு உதவியாக – உடந்தையாக செயற்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.