Breaking News

ஈழ கோரிக்கையை ஏற்கமுடியாது : அரசாங்கம்



புலம்பெயர் அமைப்புக்கள் எமது நீதித்துறை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருவதை முற்றாக நிராகரிப்பதுடன், ஈழ கோரிக்கையாளர்களின் தீர்மானங்களை தம்மால் ஒருபோதும் ஏற்கமுடியாது என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேரசிங்க மற்றும் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் சார்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயீட் அல் ஹுசைன் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் அதேவேளை உள்ளக விசாரணை என்ற நிலைப்பாட்டில் இனி எவ்வித மாற்றமும் இல்லை.

இலங்கையில் நீதிமன்றம் தற்போது சுயாதீனமாக இயங்குகின்றது. அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதன் மூலம் சர்வதேசத்திலிருந்து வரும் பிரச்சினைக்குத் தீர்வு பெறமுடியும். அதற்கான உறுதியான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.

மேலும், இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. கடந்த கால அரசாங்கங்கள் போலன்றி நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படையாக ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருகிறது. எமது நீதிமன்றம் தொடர்பில் சர்வதேசம் விமர்சிக்க முடியாது என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.