கொழும்பிலிருந்து கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: சி.வி
நல்லிணக்கத்துக்கான விடயம் முன்னெடுக்கப் படும்போது பாதிக்கப்பட்டவர்களையும் அப் பாதிப் புக்களை ஏற்படுத்தியவர்களையும் ஒருங்கிணைத்து பேசும்போது பாதிக்கப்பட்டவர்களுடைய மன நிலைகளை, அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை, வேண்டுதல்களை அறிந்து தான் நல்லிணக்கத்தை கொண்டுவரமுடியும்.
அவ்வாறில்லாமல் கொழும்பிலிருந்து கொண்டு நல்லிணக்கத்துக்காக அதை செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்று கூறுவதால் நல்லிணக்கத்தை நாட்டில் கொண்டுவரமுடியாது என்று நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹெற்ரமிடம் தான் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் சி.வி .விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்தரையாடினார்.
இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர், நல்லிணக்கத்துக்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு நோர்வே அரசாங்கம் உதவிகளை வழங்குவது தொடர்பிலும் குறிப்பிட்டு என்னுடைய கருத்துக்களை கேட்டறிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்மை எனவும் அது கொழும்பிலிருந்தே எடுக்கப்படுவதுடன் எம்முடன் கலந்தாலோசித்து எடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நான் எடுத்துக்கூறியுள்ளேன்.
இதற்கு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹெற்ரம் தனக்கு உறுதிமொழி வழங்கினார்.