இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாது இந்தியா
இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீடுகளை இனி மேற்கொள்ளாது என்று, புதுடெல்லியில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நேற்றுமுன்தினம், புதுடெல்லியில் உள்ள, பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையத்துக்குச் சென்றிருந்தது.
அங்கு நடந்த கலந்துரையாடலின் போது,இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பாக, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் விளக்களித்தனர்.
‘1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையைஇலங்கைக்கு அனுப்பிய போதும், விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும், செய்து கொண்ட சமரசம் மூலமும் அதிகளவான இழப்புகளை நாம் சந்தித்தோம்.
அந்த அனுபவமும், இலங்கை தொடர்பான முப்பது ஆண்டுகால அனுபவமும் எமக்கு அதிகமாகவே உள்ளது. தமிழ் மக்களை பாதுகாக்கவே நாம் செயற்பட்டோம். எனினும் இந்த செயற்பாட்டால் வடக்கு, கிழக்கில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய படையினர் இறந்தனர். இந்த கசப்பான அனுபவம் எமக்கு இன்றும் உள்ளது.
இலங்கைக்கும் நாம் ஆதரவை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆரம்பத்தில் இருந்து நாம் எம்மாலான அனைத்து உதவிகளை வழங்கி வந்தோம்.
13ஆவது திருத்தத்தை நாம் முன்வைத்த போதும், அதில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என நாம் தெரிவித்தோம். அப்போதைய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டாலும் இதுவரையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
நாம் இந்த விவகாரத்தில் எம்மாலான முயற்சிகளை செய்தாலும், இறுதியான தீர்வை இலங்கை அரசாங்கமே நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எம்மால் நேரடியாக தலையிட முடியாது.
இலங்கையின் நீண்டகால முரண்பாடுகளை தீர்க்க வேண்டுமாயின் அதில் எமது நேரடியான தலையீடுகள் எதையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என நாம் நம்புகிறோம். இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடுகள் எவையும் இருக்கப் போவதில்லை. மேலும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இலங்கை தமிழர் தரப்பு தெரிவித்த போதிலும் எம்மால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமஷ்டி தீர்வு ஒன்றை முன்னர் முன்வைத்தார். எனினும் இப்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அப்போது அதை எதிர்த்தது.
சந்திரிகா குமாரதுங்க பல தடவைகள் சமஷ்டி கதைகளை கூறியே தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால் இன்று சமஷ்டி என்பது ஒரு மோசமான வார்த்தையாக சிறிலங்காவில் மாற்றம்பெற்று விட்டது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்த விவகாரத்தை மாற்றிவிட்டது. ஆகவே இலங்கையில் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிடப் போவதில்லை” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.