Breaking News

பணத்தைக்காட்டி காணிகளை பறிக்க முயலும் கடற்படை!

நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி வரும் ஸ்ரீலங்கா கடற்படை மற்றும் இராணுவத்தினர் தற்போது காணி உரிமையாளர்களுக்கு பணத்தாசையை காட்டி  காணிகளை கையகப்படுத்தும் தந்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிக்கு 20 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்த காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறும் கடற்படையினர் அச்சுறுத்துவதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த வாரம் காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
  
இந்த விடயம் தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ் ஆகியோரின் கொண்டுவரப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் காணி உரிமையாளர்கள் மற்றும் கடற்படையினரிடம் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் தலைமன்னார் கடற்படை அதிகாரி, வங்காலை கடற்படை அதிகாரி ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அருட்தந்தை ஜெயபாலன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் தங்களது காணிகளை  விற்பனை செய்ய உரிமையாளர்கள் மறுத்துவிட்டதாகவும் எனினும் பணத்தை பெற்றுக்கொண்டு காணிகளை விட்டுத்தராவிட்டால், பணம் மற்றும் காணி இரண்டையும் இழக்க நேரிடும்  என கடற்படை எச்சரித்ததாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.