இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியானது
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின் முன்கூட்டிய பிரதியின் முழுமையான விபரங்கள்-
கடந்த வருடம் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கையின் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் என்ற அடிப்படையில் இந்த வாய்மூல அறிக்கை வெளியிடப்படுகிறது. மனித உரிமைப் பேரவையானது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை தொடர்பான தற்போதைய நிலை குறித்து மனித உரிமை அலுவலகம் வாய்மூல அறிக்கை வெளியிட வேண்டுமென கோரியது.
இலங்கை தொடர்பில் ஐ.நா. அலுவலகம் நடத்திய விசாரணைக்கு அமைவாக வெளியிடப்பட்ட அறிக்கையை முன்னிறுத்தி மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் வரலாற்று ரீதியான அனுசரணையை வழங்கியது. சர்வதேச சமூகத்துக்காக மட்டுமன்றி இலங்கையின் மக்களுக்காக இவ்வாறு இணை அனுசரணை வழங்கப்பட்டது. அந்தவகையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபடுவதாக அறிவித்திருக்கிறார்.
பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே எஞ்சியிருக்கின்ற இலங்கையின் பிரச்சினைகளை தீர்த்து சவால்களை கண்டறிந்து செயற்பாடுகளை மேற்கொள்ள சரியான நேரம் வந்துள்ளது. இதற்கு மனித உரிமை பேரவை எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் ஆராயலாம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை பயணம் மேற்கொண்டார். அந்த விடயங்களும் இந்த வாய்மூல அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவருடைய பயணத்திற்கு முழுமையாக ஆதரவளித்த இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றோம். அவர் தனது பயணத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் பாதுகாப்பு தளபதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார். அத்துடன் கண்டிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வடமாகாண முதலமைச்சரையும் பாதிக்கப்பட்டோரையும் மதத்தலைவர்களையும் சந்தித்திருந்தார். அந்த விடயங்களையும் இந்த வாய்மூல அறிக்கை உள்ளடக்குகின்றது.
இந்த வாய்மூல அறிக்கையானது இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட விசேட ஆணையாளர்கள் மற்றும் அறிக்கையாளர்களின் பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஐ.நா.வுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் முடிவை மனித உரிமை ஆணையாளர் வரவேற்கின்றார். இலங்கைக்கு பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த குழு வருகைதந்திருந்தது. அதுமட்டுமன்றி சித்திரவதை உள்ளிட்ட விடயங்களை கையாளும் விசேட அறிக்கையாளரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சுயாதீன நீதித்துறை தொடர்பான அறிக்கையாளர், சிறுபான்மை விவகாரம் தொடர்பான அறிக்கையாளர் ஆகியோரும் இலங்கை வந்திருந்தார். இலங்கையானது 2017 ஆம் ஆண்டு பூகோள மீளாய்வு, கலந்தாராய்விலும் உட்படுத்தப்படும்.
மனித உரிமை அலுவலகம் தொடர்ந்தும் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இதற்காக மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளையும் வழங்குகிறது. இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம் இதில் அக்கறையுடன் செயற்படுகிறது.
2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய நல்லாட்சி அரசாங்கம் மறுசீரமைப்புகளுக்கு பொருத்தமான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. எனினும் முழுமையான மறுசீரமைப்புக்கான வாக்குறுதிகள் இன்னும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளன. இந்த விடயத்தில் ஒரு குழப்பகரமான தன்மை காணப்படுகிறது. பொறுப்புக்கூறலிலும் இது தாக்கத்தை செலுத்தும்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் அடைய பெற்றுள்ளது. மார்ச் மாதம் நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.
மனித உரிமை விவகாரத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பானது சிறந்த சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கிறது. அதாவது இது மீள்நிகழாமையை உறுதிப்படுத்துகிறது. மேலும் பல்வேறு உரிமைக்கான சட்டமூலங்கள், அதிகாரங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள், சுயாதீன நீதித்துறைக்கான சந்தர்ப்பம், சர்வதேச மனித உரிமை சாசனங்களுடனான ஈடுபாடு என்பவற்றை இந்த விடயம் வழங்குகிறது. புதிய அரசியலமைப்பானது நிலைமாறு நீதி விடயத்திலும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கிறது. அரசியலமைப்பு மாற்ற செயற்பாடானது பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறு நீதி மனித உரிமை ஆகியவற்றை வர்த்தக நோக்கத்துக்காக விட்டுக்கொடுத்து விடுமென நாம் எதிர்பார்க்கவில்லை.
அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அதனூடாக அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டதுடன், சுயாதீன ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டன. எவ்வாறிருப்பினும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவானது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் நல்லிணக்கத்துக்காக சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாங்கம் சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது. தனிப்பட்ட நபர்கள் மீதான தடைகளும் நீக்கப்பட்டன. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் வடக்கு முதலமைச்சர் பௌத்த விகாரைக்கு சென்று மரியாதை செலுத்தியிருந்தார். 2016 மே மாதம் 19 ஆம் திகதி யுத்த வெற்றி விழாவிற்கு பதிலாக நினைவு தினம் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர். ஜனாதிபதி தன்னை கொல்ல வந்தவருக்கே மன்னிப்பு வழங்கியிருந்தார். இவ்வாறு சில விடயங்களை கூறலாம்.
மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான மாற்றம் அவசியமாகும். எவ்வாறெனினும் சிங்கலே போன்ற இனவாத பிரச்சாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறோம்.
அரசாங்கம் பாதிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் வடக்கில் ஒருதொகை காணிகளை விடுவித்தது. 2016 ஆம் ஆண்டிலும் ஒருதொகை காணிகள் விடுவிக்கப்பட்டன. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு சென்றிருந்தபோது வடக்கின் சில பகுதிகளுக்கு சென்று காணி விடுவிப்பில் காணப்படுகின்ற சிக்கல்களை அறிந்திருந்தார். எவ்வாறெனினும் ஜூன் மாதமாகும்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுமென அவர் எதிர்பார்க்கின்றார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் காணப்படுகிறது. 2015 ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கம் 39 பேரை பிணையில் விடுவித்தது. இன்னும் 250 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களை பாதிப்பதுடன் சந்தேக நபர்களையும் உண்ணாவிரதம் இருக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக ஒரு பொறிமுறையை தயாரிக்க வேண்டும்.
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறிவிட்டு அதன் கீழ் தொடர்ந்து கைதுகளை மேற்கொண்டு வருகிறது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில கைதுகள் பலாத்காரமாக இடம்பெற்றுள்ளன. முறையான செயற்பாடுகளின்றி கைதுகள் இடம்பெறுகின்றன. அதாவது வௌ்ளை வான் கடத்தல்களை போன்று சில கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசாங்கம் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பிய புலிகளுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் சிலர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது அரசாங்கம் சிவில் கட்டுப்பாடு மற்றும் இராணுவ செயற்பாடுகளில் எதிர்கொள்கின்ற சவால்களை எடுத்துக் காட்டுகின்றது. வீதி சோதனை சாவடிகள் நீக்கப்பட்டமை, இராணுவ மயமாக்கலை குறைத்தல் என்பன பாராட்டப்பட்டாலும் வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகமாக இருப்பது அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது. அது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைக்கு அமைவாக நடைபெறும் என நம்புகின்றோம். இந்த விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் அதிகாரங்களை வழங்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இருக்கும் இடங்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றம் முன்னுள்ள வழக்குகளை விரைவாக கையாள வேண்டும். காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் , றக்பீ வீரர் வசீம் தாஜுதீன் போன்ற வழக்குகளில் முன்னேற்றத்தை காண முடிகின்றது. திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை, அரச சார்பற்ற நிறுவன ஊழியர் படுகொலை வழக்குகள் தொடர்கின்றன.
விஸ்வமடு பகுதியில் ஒரு பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நான்கு இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால் இது போன்ற தண்டனைகள் குறைவாகவுள்ளன. ஆணையாளர் இலங்கைக்கு சென்றிருந்தபோது 39 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பில் (இராணுவம் சம்பந்தப்பட்டதாக கூறப்படும்) அறிவிக்கப்பட்டது. துணை ஆயுதக்குழுத் தலைவரான பிள்ளையான் என்பவர், ஜோசப் பராராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் இருக்கிறார். எனினும் ஏனைய ஆயுதக் குழுத் தலைவர்கள் அதாவது கொலை, கடத்தல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் விசாரணையை எதிர்கொள்ள வில்லை. இந்த சம்பவங்கள் மிக விரைவாக விசாரணை நடத்தப்பட்டு நிலைமாறுகால விசாரணை பொறிமுறைக்கு வரவேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் முறைமை வரவேண்டும். புதிய அரசாங்கம் இது தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றியது. சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபை 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமூலத்தை முழுமையாக மீளாய்வு செய்து ஒருசிறந்த முறைமை கொண்டு வருமாறு அரசாங்கத்தை மனித உரிமை அலுவலகம் வலியுறுத்துகிறது.
ஜெனிவா பிரேரணையானது பரந்தப்பட்ட நீதிப் பொறிமுறைக்கான முறையை மேற்கொள்ளுமாறு கோருகிறது. அதில் உண்மை கண்டறிதல், நட்டஈடு வழங்குதல், நிறுவன ரீதியான மறுசீரமைப்பு என்பன பிரேரிக்கப்பட்டுள்ளன. விசாரணை பொறிமுறையில் அரசாங்கம் என்னதான் நடவடிக்கையை மேற்கொண்டாலும் அதில் ஒருவித தயக்கமும் தாமதமும் நிலவுகிறது.
2015 ஆம் ஆண்டு பிரதமர் பொறிமுறையில் மாறுபட்ட நிறுவனங்களை இணைக்கும் வகையில் ஒரு செயற்குழுவை நியமித்தார். இதற்கு நல்லிணக்கத்துக்கான செயலகமும் ஒத்துழைப்பு வழங்கியது. இந்த நல்லிணக்க செயலகத்துக்கு செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டமை வரவேற்க்கத்தக்கது.
பிரேரணைக்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனை பெறப்பட்டு விசாரணை பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும். விசேடமாக விசாரணை பொறிமுறையானது பெண்களை அதிகளவில் பங்குபடுத்துவதாக அமைய வேண்டும்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் 11 பேர் கொண்ட செயலணியை நியமித்தது. பொறிமுறையில் ஆலோசனை நடவடிக்கைகளுக்காக இது நியமிக்கப்பட்டது. பெப்ரவரி மாதம் ஆலோசணை பெறும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. எழுத்துமூலமும் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. இந்த விடயத்தில் வெ ளிநாடுகளிலுள்ள பாதிக்கப்பட்டடோரும் புலம்பெயர் மக்களும் சம்பந்தப்படுத்தப்பட வேண்டுமென ஆணையாளர் வலியுறுத்துகின்றார்.
அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் திறமையாகவும் சமாதானத்துடனும் செயற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் அரசாங்கம் நிலைமாறுகால விசாரணை பொறிமுறை தொடர்பில் பல்வேறு வகையிலான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதில் ஒருசில வெ ளிப்படைத்தன்மை காணப்படுகிறது. ஆனால் இந்த செயற்பாடுகள் முன்கூட்டிய பெறுபேறுகளை பெறுவதாகவும் அர்த்தமற்றதாகவும் அமைந்துவிடக்கூடாது. இதில் பொதுமக்கள் பங்கேற்பு செயற்பாடுகள் இடம்பெற வேண்டும்.
காணாமல்போனோர்களை பற்றிய அலுவலகத்தை அமைப்பதில் இந்த குறைப்பாட்டை நாம் கண்டோம். காணாமல் போனோரை தொடர்பில் அரசாங்கம் அவசரமாக செயற்பட்டு உண்மையை கண்டறிய வேண்டும். தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள அலுவலகமானது நிரந்தரமானதாகவும், தீர்வுகளை கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அரசாங்கம் மேற்கொள்ளும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான வரைவை அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு நிறுவியுள்ளது. ஆனால் அந்த வரைவு மக்களுக்கு வழங்கப்பட வில்லை.
காணாமல்போனோர் பற்றிய சர்வதேச சாசனத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. இது பலவந்தமாக காணாமல்போனோர் விடயத்தை குற்றவியல் கோவையின் கீழ் கொண்டுவருவதற்கு உதவும் என ஆணையாளர் நம்புகின்றார். காணாமல்போனோருக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. காணாமல்போனோர் ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் அலுவலகத்திற்கான வரைவைத் தயாரித்த நிபுணர்கள் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் வடிவத்தை தயாரிப்பதற்கும் பங்களிப்பு செய்கின்றனர். குறிப்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, விசேட நீதிமன்றம் ஆகியவற்றில் இவர்கள் செயற்படுகின்றனர். எனினும் இவற்றுக்கான ஆவணங்கள் வெளியிடப்படவில்லை. இந்தவிடயம் அவசியமானதும் வரவேற்கத்தக்கது என்பதை குறிப்பிடுவதுடன் வெளிப்படைத்தன்மையின்மையின் குறைப்பாடு, பொறிமுறை தொடர்பான செயற்பாடுகளை குறைத்து மதிப்பிட செய்கிறது.
நீதி விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் பங்களிப்பு தொடர்பில் மிக முக்கியமான கேள்வி இன்னும் நிலுவையில் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை பொறிமுயைில் சர்வதேச பங்களிப்பு இருக்காது என்று இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் பார்வையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் சர்வதேச பங்களிப்பு அவசியமாக உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் உணர்கிறார். காரணம் இலங்கையின் நீதி நிறுவனங்கள் தற்போது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களில் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அண்மைய கால அறிக்கைகளில் புதிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கோரிக்கை விடுக்கிறது.
பாதுகாப்பு மறுசீரமைப்புக்களை அரசாங்கம் எவ்வாறு செய்யப் போகிறது என்பது முக்கிய சவாலாகும். இலங்கை இராணுவப் படைகள் சர்வதேச மட்டத்தில் உறுதியான இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசாங்கம் ஜெனிவா பிரேரணை அமுலாக்கத்தில் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் நீதிப்பொறிமுறையை தயாரிக்கும் விடயத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் ஊக்கமடைகிறது. அரசியலமைப்பு பேரவை உருவாக்கம் சுயாதீன மனித உரிமை ஆணைக்குழு உருவாக்கம் காணாமல்போனோர் பற்றிய சாசனத்தில் கைச்சாத்திடல் போன்றவைகள் இலங்கையின் எதிர்காலத்திற்கு பாரிய செல்லுபடியான செயற்பாடுகளாகும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டதும் காணாமல்போனோர்களது உறவினர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உருவாக்கப்படும் நீதி வழங்கும் பொறிமுறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பரந்துப்பட்ட ரீதியில் ஆராயப்பட வேண்டுமென்பதுடன் அவை மீண்டும் இடம்பெறால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காணி விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ளவர்கள் தொடர்பில் கடந்த காலத்தில் மேலும் முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம். இது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். பலாத்கார கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இராணுவ கண்காணிப்பு போன்றன தொடர்பில் தொடரும் குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் பரந்துபட்ட உபாய மார்க்கத்தை வெளியிட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை ஆணையாயளர் எதிர்பார்க்கிறார். இது சர்வதேச உதவிக்கு வலுசேர்க்கும் இதில் தற்போதைய சிவில் சமூகத்துடனான ஆலோசனைகளை பலப்படுத்துவதாக அமையும். நீதிப்பொறிமுறையை நிறுவுவதற்கும் பக்க பலமாக அமையும். இந்தவிடயத்தில் ஐ.நா. அலுவலகம் தொடர்ந்து ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளது.
இலங்கையின் செயற்பாடுகளுக்கு கால அவகாசம் தேவையாகும். பல்வேறு செயற்பாடுகளை கையாளுதல், நிலைமாறு கால நீதி, பொருளாதார மீள்கை, பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு என்பன எந்தவோர் அரசாங்கத்தினதும் செயற்பாட்டில் சவாலை ஏற்படுத்தும். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எதிர்பார்க்கிறார்.