Breaking News

இலங்கையை எச்சரிக்க வேண்டும் – ஜோன் கெரிக்கு அழுத்தம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றமான- காங்கிரசின்- 24 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கு, இதுதொடர்பான 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தக் கடிதத்தில், கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தான், அமெரிக்காவின் மேலதிக நிதி உதவிகள், வர்த்தக மற்றும் இராணுவ சலுகைகள் தங்கியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெளிவான அறிவிப்பை விடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இடைமாறு கால நீதி, இராணுவத்தினர் தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு முடிவுகாணல், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, சட்டத்தின் ஆட்சி, 30/1 தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ் மக்களின் கரிசனைகளுக்கு தீர்வு காணுதல், ஆகியன தொடர்பாக நம்பகமான முன்னேற்றங்களில் தான், அமெரிக்காவின் உதவிகள் தொடரும் என்பதை சிறிலங்காவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை இன்று ஜெனிவாவில் வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, சக்திவாய்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் இருந்து இந்த இறுக்கமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னேற்றங்கள் மிகவும் மெதுவாக- விருப்பமின்றி இடம்பெறுகின்றன. நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான செயல்முறை இப்போது, நம்பிக்கையை பலவீனப்படுத்தும் காரணியாக மாறியுள்ளது என்றும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள மூத்த அதிகாரிகள், முக்கியமான குற்றவியல் விசாரணைகளை தடுப்பது தொடர்பான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை ஜோன் கெரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், சிறிலங்கா அரசாங்கம் இந்த தடுப்பாளர்களை பதவிநீக்க அல்லது அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைச் சீர்குலைக்கும் கொள்கை வகுப்பு நிலையில் உள்ள அதிகாரிகளை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தெளிவானஆணை தொடர்பாக – அதனை நடைமுறைப்படுத்தவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் தொடர்ந்து பேச வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இடைமாறு கால நீதி, பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல், சட்டத்தின் ஆட்சி, சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, ஏனைய சட்ட மறுசீரமைப்புகள், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை நீக்குதல், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, வடக்கு கிழக்கில் இராணுவமயநீக்கம், இனவிவகாரங்கள், போர் மரபு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச வேண்டும் என்றும் இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், டன்னி கே.டேவிஸ், ஸ்டீவ் ஸ்ரிவேர்ஸ், ரிச்சர்ட் ஈ நீல், லியோனாட் லான்ஸ், ஜான் ஸ்காகோவ்ஸ்கி, பற்றிக் ஜே ரிபேரி, வில்லியம் ஆர் கீற்றிங், டானியல் எம்.டொனோவன் மற்றும் 16 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.