Breaking News

வடமாகாண சபை உறுப்பினர்கள் சம்பந்தருக்கு அவரச கடிதம்



வடமாகாண சபையை குழப்புவதாக வடமாகாண சபையின் சில உறுப்பினர்கள் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், முற்றுமுழுதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வட மாகாண சபையின் உறுப்பினர்களான இம்மானுவேல் ஆர்னோல்ட் , கேசவன் சஜந்தன், அரியகுட்டி பரஞ்சோதி, சந்தரலிங்கம் சுகிர்தன் ஆகிய நால்வரும் கையெழுத்திட்டு எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான, இரா. சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கடிதத்தில், ‘அண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாகாணசபையினைக் குழப்புகின்றார்கள் என்னும் தலைப்பில் ஒருசில மாகாணசபை உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு முறைப்பாடொன்றினை அங்கத்துவக் கட்சியொன்றின் தலைவர் முன்வைத்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேற்படி குற்றச்சாட்டானது உண்மை நிலையை மறைப்பதற்காக, ஜனநாயக மரபுகளை மதிக்காது, ஜனநாயக செயற்பாடுகளை கொச்சைப் படுத்தும் விதத்தில் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான அரசியல்ரீதியான ஆற்றாமையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு அதனை முற்றாக நிராகரித்து மறுதலிக்கின்றோம்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தவர்களை மக்கள் அடையாளம் கண்டு கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தக்கபாடம் புகட்டியிருந்தனர்.

இவ்விதம் ஜனநாயக ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் ஆற்றாமையாகவே மேற்படி குற்றஞ்சுமத்தல்கள் அமைந்திருக்கின்றதே தவிர உண்மைகள் எதனையும் சுட்டி நிற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் , வடமாகாண சபையை வினைத்திறனுடன் செயற்பட விடாது, மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார் என மாகாண சபை உறுப்பினரின் பெயர் குறிப்பிட்டு அவரை கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை முன்வைத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.