Breaking News

வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகள் இடித்து அழிக்கும் இராணுவம்(படங்கள் இணைப்பு)



வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை உடைத்து அகற்றும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு உடைக்கப்படும் வீடுகளின் இருந்து ஏஞ்சும் பொருட்களை அங்கிருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் செயற்பாடுகளும் பொது மக்களின் கண்முன்னே நடைபெற்று வருகின்றது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து இறுதியாக 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திக்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் போது கட்டுவன் மற்றும் குரும்பசிட்டிப் சுமார் 123 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.

மக்களுடைய குடிமனைகள் நிறைந்த பகுதியாக இப்பகுதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து இப் பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக அதிகளவான குடும்பங்கள் தத்தமது கிராம சேவையாளர்களிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

கட்டுவன் குரும்பசிட்டி வீதிக்கு ஒருபுறம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய பக்கம் முற்கம்பிகள் அடைக்கப்பட்டு இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையமாக காணப்படுகின்றது.

இவ்வாறு இராணுவத்தின் வசம் உள்ள பகுதிகளில் பெரும்பாலன வீடுகள் அழிவடையாமலும் காணப்படுகின்றது. இருப்பினும் உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் உள்ள குறித்த வீடுகளை விட்டு இராணுவத்தினர் வெளியேறி வருகின்றார்கள்.

இவ்வாறு வெளியேறும் இராணுவத்தினர் தாம் நிலை கொண்டிருந்த பொது மக்களின் வீடுகளை உடைத்தழிக்கும் நடவடிக்கைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக வீடுகளை உடைக்கும் இராணுவத்தினர் அவ்வீடுகளில் ஜன்னர்கள், கதவுகள், நிலைகள், கூரைத்தகரங்கள், ஓடுகள், தளபாடங்கள் போன்றவற்றினை எடுத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லுகின்றார்கள்.