மூதூர் படுகொலை தொடர்பான விசாரணை மீண்டும் ஆரம்பம்
திருகோணமலை, மூதூர் குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தற்போது ஜூரி சபை முன்னிலையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
1996-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இரவில் இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இதன்போது 39 பேர் காயமடைந்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக ஆரம்ப காலத்தில், மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது தெகியத்த இராணுவ முகாமில் கடமையாற்றிய எட்டு இராணு வீரர்கள் சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நாட்டில் அப்போது நிலவிய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நேரில் கண்டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர் பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இந்த வழக்கு விசாரணைக்கு சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ள போதிலும் 16 பேர் மட்டுமே சமுகமளித்திருந்தனர்.
ஏனைய, நான்கு பேரும் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் விசாரணையின் போது சாட்சியமளித்த பெண்ணொருவர், எதிரிகளில் ஒருவரே தனது கணவனை சுட்டுக் கொன்றவர் என அடையாளம் காட்டியுள்ளார்.
எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில் ஏனைய ஆறு பேரும் அஜராகியுள்ளனர்.
தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த ஆறு இராணுவ வீரர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.