சர்வதேச நீதிபதிகள் விடயம்: கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு
மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மிகவும் திறமையான முறையில் உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக கூறிவந்தாலும் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து அழுத்தம் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றும் கிருபாகரன் சுட்டிக்காட்டினார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வெளியிடவுள்ள வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை கொடுப்பதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32 ஆவது கூட்டத்தொடர் மற்றும் உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக குரல் கொடுத்துவருகின்ற நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே கிருபாகரன் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.