பிரபாகரனை தலைவனாக்கியது யார்? சீமான்
தலாய்லாமா நாடு கேட்டால் ஆதரிக்கும் இந்தியா தமிழன் நாடு கேட்கும் போது எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவராக ஆயுதம் ஏந்தவில்லை.
மாறாக எந்த ஆயுதத்தினை கொண்டு தமிழ் இனத்தினை அழிக்க சிங்கள இராணுவம் துடித்ததோ, அந்த ஆயுதத்தினை கொண்டு தமிழ் இனத்தினை பாதுகாக்கேவே ஆயுதம் ஏந்தினார்.
ஈழம் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கருத்தில் உருவான கூட்டாளி படத்தின் திரையிடல் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈழம் என்பது மூன்றெழுத்து வார்த்தையல்ல. அது ஒரு தேசிய இனத்தின் கனவு, உயிர், மூச்சு மற்றும் விடுதலை.தமிழீழ விடுதலைப்புலிகளில் தலைவர் வே.பிரபாகரனை தலைவனாக்கியது தமிழன் அல்ல. அவரை தலைவனாக்கியது சிங்களவர்களே.
தேசிய தலைவரின் உயிருக்கு 10 லட்சம் ரூபா அறிவித்த போது தான், அவர் யார் என்று அனைவராலும் அறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.இந்திய தேசத்தின் விடுதலைக்கு போராடிய சுபாஸ் சந்திரபோஸ் ”கொஞ்சம் இரத்தம் தாருங்கள், நிறைய சுதந்திரம் தருகின்றேன் என்றார்.
அதேபோலவே என் தேசிய தலைவரும் ”நாங்கள் நிறைய இரத்தம் தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்தரம் தாருங்கள்” என்றார்.சர்வதேச நாடுகளுடன் யுத்தம் புரியாத இலங்கை சொந்த நாட்டு மக்களுடன் போரிட்டு தமிழ் மக்களை கொன்று குவித்தது. அத்துடன் இந்திய மீனவர்கள் 840 பேரையும் கொன்று குவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.