Breaking News

இறுதிப் போரில் கொத்து குண்டு விவகாரம்! விசாரணை அவசியம் என்கிறார் அல் ஹுசைன்

ஸ்ரீலங்காவின் ஆளும் தேசிய அரசாங்கம் உறுதி அளித்த, ஆட்சிமுறை மறுசீரமைப்பு, நிலைமாறு நீதிப்பொறிமுறை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் - அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.


இந்த விடயங்களை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நாளை புதன்கிழமை அவர் எடுத்துரைக்கவுள்ளார்.

ஸ்ரீலங்காவின் இணை அனுசரணையுடன் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாரின் முதலாவது அறிக்கையின் பிரதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவன ரீதியான தடைகள், நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டணி அரசாங்கத்தில் சிக்கலான கட்சி அரசியல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள செய்த் ராத்-அல் ஹுசைன், அரசியலமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள்(Cluster Munitions) பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு குறித்து முழுமையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.