ஆயுத பேரழிவு - இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி
பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அளித்துள்ளது.
கடந்த 13ஆம் நாள் தொடக்கம் 17ஆம் திகதி வரையான ஐந்து நாட்கள், கொழும்பில் இதுதொடர்பாக பயிற்சி அளிக்கும் கருத்தரங்கு ஒன்று அமெரி்க்காவினால் நடத்தப்பட்டது.
இதில் சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை, காவல்துறை, கடற்படை, கடலோரக் காவல்படை அதிகாரிகள் பங்குபற்றினர். இவர்களுக்கு, அனைத்துலக பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுக்கும் திட்டத்தைச் சேர்ந்த, அமெரிக்க இராணுவ நிபுணர்கள்- எல்லைப் பாதுகாப்பு, தொழில்நுட்பம், அச்சுறுத்தல் மதிப்பீடு போன்ற தொனிப்பொருள்களில் விளக்கங்களை அளித்தனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை உள்ளடக்கிய சிறிலங்கா – அமெரிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.