ஐ.தே.க.வில் இணைகிறார் பொன்சேகா!
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக ஐ.தே.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெறவுள்ளார். இந்நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு சரத் பொன்சேகா வெற்றிபெறவில்லை. அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை.
இருந்தாலும் அதன்பின்னர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஜனநாயக கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது..
இதன்போது முன்னாள் காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ் குணவர்தன மரணம் அடைந்ததையடுத்து வெற்றிடமாக இருந்த ஆசனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டு பிராந்தி அபிவிருத்தி அமைச்சராக பொன்சேகா பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.