நல்லாட்சி அரசாங்கத்தை குறி வைக்கும் மஹிந்த அணி
கூட்டு எதிர்க் கட்சியை பயன்படுத்தி பாராளுமன்றத்திலும் தேசிய மட்டத்திலும் காய் நகர்த்தல்களை மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நல்லாட்சி அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் பசில் ராஜபக்ஷ தலைமையில் மாற்று அரசியல் கட்சி ஒன்றுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட புதிய அரசியல் கட்சியொன்றுக்கான அடிப்படை நகர்வுகள் முழுமையடைந்துள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் 2 ஆம் திகதி பதுளையில் ஆதரவு அணிகளை திரட்டும் கூட்டங்களை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னெடுக்கவுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் தீவிர பார்வை கூட்டு எதிர்க் கட்சியின் அரசியல் நகர்வுகளை நோக்கி காணப்படுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தனது ஸ்தீரத்தன்மைக்காக இரட்டை அரசியல் நகர்வுகளை ஒரு இலக்கை நோக்கி நகர்த்துகின்றார்.
இதில் ஒன்றான புதிய அரசியல் செயலணி ஒன்றுக்கான முன்னெடுப்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடர்ந்தும் மூன்று நாட்கள் பதுளையில் பல கட்ட பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, அடுத்து வரும் தேர்தல்களை மையப்படுத்தி ஆளணி திரட்டும் நடவடிக்கையில் ஈடுப்பட உள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.