வட மாகாணத்திற்கான பொருளாதார மையம் வேறு பிரதேசத்திற்கு செல்ல அனுமதியோம்!
வட மாகாணத்திற்கான பொருளாதார மையம் வேறு மாகாணங்களுக்கு கொண்டுசெல்லப்படுமாயின், அதனை தமிழ் முற்போக்குக் கூட்டணி கடுமையாக எதிர்க்குமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு, வட மாகாணத்திற்கான பொருளாதார மையம் எந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டுமென வட மாகாண மக்கள் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் இருநூறு கோடி ரூபா செலவில் வடக்கில் நிர்மாணிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்திற்கு உரிய இடத்தினை ஒதுக்கிக் கொடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால், அதனை மதவாச்சிக்கு மாற்றுவதற்கான அமைச்சரவை யோசனையொன்றை கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர் பி.ஹரிசன் கொண்டுவந்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் மனோ ஊடகமொன்றிற்கு மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண பொருளாதார மையம் எங்கே அமையவேண்டுமென மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால், வெளியில் இருப்பவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்ட அமைச்சர் மனோ, இதுகுறித்து இனியும் தாமதிப்பது பொருத்தமாக அமையாதென தெரிவித்துள்ளார்.