காணி விவகாரம் : மங்கள ஐ.நாவில் விளக்கம்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வடக்கில் காணி விடுவிப்பு, இராணுவம் குறைக்கப்படுதல், சர்வதேச நீதிபதிகள் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 வது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இவர் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை இதுதொடர்பில் உரையாற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக மங்கள சமரவீர ஜெனிவாவில் எடுத்துக்கூறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் ஜெனிவா மனித உரிமைபேரவையில் நிகழ்த்தவுள்ள உரையில் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தும் அமைச்சர் சமரவீர ஜெனிவாவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமைவாக அரசாங்கமானது உள்ளக விசாரணை பொறமுறையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே அந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் வெளிவிவவாகர அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளார். அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.
விசேடமாக இந்த காணாமல்போனோர் குறித்து ஆராய்வதற்கான அலுவலகம் அமைக்கப்படும் விடயத்தை இம்முறை அரசாங்கம் ஜெனிவாவில் மிக முக்கியதோர் விடயமாக எடுத்தியம்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.