வெற்றிச் செல்வி எழுதிய ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியிடப்பட்டது
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல், இன்று (சனிக்கிழமை) காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பதினெட்டு வருடங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஓர் போராளியாக செயற்பட்டு, தற்போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான வெற்றிச் செல்வி எழுதிய ஏழாவது நூலான, ‘ஆறிப்போன காயங்களின் வலி’ எனும் நூல் வெளியிடப்பட்டது.
ஆசிரியை தனலெட்சுமி கிருஸ்துராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் பிரதம விருந்தினராகவும், மருத்துவ போராளி திருமதி தனேஸ்குமார் சத்தியபாமா சிறப்பு விருந்தினராகவும், சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், முன்னாள் போராளிகள், எழுத்தாளர்கள், மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டு, வெளியீடு செய்யப்பட்ட நூலினை பெற்றுக்கொண்டனர்.
குறித்த நூலானது முன்னாள் பெண் போராளி எழுதியதனால், நூலில் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்காக, புலனாய்வுத்துறையினர் நூல் வெளியீடு செய்யப்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மற்றும் நிகழ்வு இடம் பெற்ற மண்டபத்தினையும் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.