யுத்த காலத்தில் உரித்துக்களை இழந்தவர்களுக்கு நிவாரணம்
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் தமது உரித்துக்களை இழந்த, சட்டரீதியான காணி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க காலவிதிப்பு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
1983 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமையின் காரணமாக தமது ஆதனங்களை கைவிட்டுச் செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள், தமது காணிகள் உள்ளிட்ட அசையாச் சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படுகின்ற காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் அசையாச்சொத்தின் உரித்தினை தொடர்ச்சியாக வைத்திருக்கின்ற ஒருவர் அதன் உரித்தினைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், யுத்தம் நிலவிய சூழ்நிலையில் சட்டரீதியற்ற முறையில் காணிகள் உள்ளிட்ட அசையா சொத்துக்களில் அத்துமீறி குடியேறியவர்கள் அவற்றின் உரித்தினைக் கோரி வருகின்றனர். இதன் காரணமாக அத்தகைய சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் கால விதிப்பு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விசேட ஏற்பாடுகள் இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் ஏற்புடையதாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் சட்டரீதியற்ற மற்றும் அத்துமீறிய தன்னகப்படுத்தலின் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற ஆதனங்களை இழந்த மக்கள் இப்புதிய சட்டத்தின் ஏற்பாடுகளைப் பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.