நீதி விசாரணையில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறதா அரசு?
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நீதி விசாரணையில், இலங்கை அரசாங்கம் தவறான அணுகுமுறையை பின்பற்றுவதாக குற்றஞ்சா ட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதமாக்கி இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் குறிப்பிட்டு, சிவில் சமூக பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 17 மாதங்கள் கடந்துள்ள போதும், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரம் முடிவுக்குக் கொணடுவரப்படாத காரணத்தால் நாட்டில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்று வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினருடன் கலந்தாலோசிக்காது காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகமொன்றை அமைப்பதானது, அரசின் வெளிப்படைத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு நீதி விசாரணை பொறிமுறையில் இலங்கை அரசாங்கம் தவறான அணுகுமுறைகளை பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், பொறுப்புக்கூறுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் குறித்து நம்பத்தகுந்த உத்தரவாதங்கள் எவையும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில், உண்மை ஆணைக்குழு என இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் முயன்று வருவதானது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்லவென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக செயற்படுத்தும் வகையிலான சட்டத்தை நிறைவேற்றினால் மாத்திரமே, நீதிக்கான முழுமையான அர்ப்பணிப்பை அரசாங்கம் வெளிப்படுத்துவதாக அமையுமென சிவில் சமூக பிரதிநிதிகள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொறுப்புக்கூறுதல் தொடர்பில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட சமூகத்தினார் சார்பில் இவ்வாறான பல விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை எதிர்வரும் 29ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது கேள்கிக்குறியாகவே உள்ளது.