வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என மக்கள் கருதுகின்றனர்
இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்கின்ற நிலைமை காணப்படுகிறது. வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என்றும் மக்களின் பலரும் கருதுகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தகவல் அறியும் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை தவிர்க்க வேண்டும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நிறுவப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும், அச்சமின்றியும் செயற்படுவதற்குரிய சூழல் கிடைத்தால் மாத்திரமே சட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மை நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தகவல் அறியும் உரிமைக்கான சட்டமானது அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்துகிறது. மக்களின் இறையாண்மையானது அரசு, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகியவற்றில் தங்கியுள்ளது.
பல்வேறு நிறுவனங்களும் இந்த அதிகாரங்களை மக்களின் பெயரால் அனுபவிக்கின்றன. இந்த ஆட்சி அதிகாரங்களை வௌ;வேறான ஆட்சிமுறை நிறுவனங்களான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பன அனுபவிக்கின்றன. இவை ஒன்றில் இன்னொன்று தலையீடு செய்துக் கொள்வதில்லை. ஜனநாயகத்தையும் மக்களின் இறைமையையும் பாதுகாக்க இது அடிப்படையாகும்.
மக்கள் தங்களது இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க அர்த்தப்புஷ்டியான பங்களிப்பை வழங்க வேண்டுமெனில் நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றி குறிப்பாக ஆட்சிமுறை சம்பந்தமான விடயங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
எனினும், அனைத்து தகவல்களையும் முழுமையாக அறியத்தருவதில் நடைமுறை சாத்தியமில்லை. தேசிய நலன் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்த முடியாது. ஆனால், ஆட்சிமுறை பற்றி நம்பகரமானதும் துல்லியமானதுமான தகவல்களை மக்கள் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.
இலங்கையில் நிறுவனங்கள் அரசியல்மயப்படுத்தப்படும் கலாசாரம் இருக்கிறது. நீதித்துறை கூட அதிலிருந்து தப்பியிருக்கவில்லை. இந்த நாட்டின் நீதித்துறை மீது ஒரு காலத்தில் கௌரவம் இருந்தது. எனினும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் பக்கச்சார்பின்மை பற்றிய அந்த கௌரவம் தொடர்ந்தும் நீடித்திருக்கவில்லை. இதன் விளைவாக சட்ட ஆட்சி பாதிக்கப்பட்டதுடன், அதன் பெறுபேறாக நாடும் பாதிப்புகளை சந்தித்தது.
இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்கின்ற நிலைமை காணப்படுகிறது. வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என்றும் மக்களின் பலரும் கருதுகின்றனர்.
இந்த சட்டமூலத்தின் உண்மையான நோக்கங்களை அடைவது என்றால், இந்த சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார்.