ஏட்டிக்குப் போட்டியாக செய்ட் அல் ஹுசேனை சந்திக்கவுள்ள அரசாங்க, கூட்டமைப்பு தரப்பினர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள், மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
இரண்டு தரப்பினருமே ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பிலேயே செய்ட் அல் ஹுசேனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். குறிப்பாக அரசாங்க தரப்பினர் தாம் சிறந்த முறையில் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்திவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவிக்கவுள்ளனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் குறிப்பிடத்தக்களவு அதிருப்தியை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 32 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மற்றும் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உரையாற்றவுள்ளனர். ஜூன் மாதம் 29 ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசெனினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எக்காரணம் கொண்டும் வெ ளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்றும் உள்நாட்டு நீதிபதிகளை கொண்டே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
அத்துடன் சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணை பொறிமுறையில் இணைத்துக்கொள்ளமாட்டோம் என்றும் உள்ளக நீதிபதிகளைக்கொண்டு விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் வலுவான முறையில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு வெளிவிவகார அமைச்சரினால் ஜெனிவாவில் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்ட் அல் ஹுசேன் இலஙகைக்கு விஜயம் செய்திருந்தபோது வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முடிவெடுப்பது இலங்கையினுடைய தீர்மானமாகும் என்று வலியுறுத்தியிருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயம் குறித்தும் அவரின் மதிப்பீடு தொடர்பிலும் வாய்மூல அறிக்கையில் விடயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது