லசந்த, பிரகீத் கொலைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மாயம்
ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போயிருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும், இராணுவத்தினரிடம் உள்ள ஆவணங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், இராணுவம் அவற்றை இன்னமும் கையளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.
இந்தநிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைக்கவில்லை என்று ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இராணுவக் காவல்துறையில் சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்றை, இராணுவத் தளபதி நியமித்திருந்தார்.
எனினும், அந்த சிறப்பு விசாரணைப் பிரிவினால், தேவையான ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இந்த ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணை நீதிமன்றம் ஒன்றை இராணுவத் தளபதி அமைத்துள்ளார்.
இந்த ஆவணங்கள் தவறதலாக எங்கேனும் வைக்கப்பட்டுள்ளனவா அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டிருந்தால் அதற்குப் பொறுப்பான அதிகாரி யார் என்று கண்டறியும் வகையில் இந்த விசாரணை நீதிமன்றம் செயற்படுகிறது.
அதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய- காணாமற்போயுள்ள ஆவணங்களைக் கண்டறிவதற்கு மற்றொரு இராணுவ நீதிமன்றத்தையும், இராணுவத் தளபதி நியமித்துள்ளார்.
இந்த இரண்டு விசாரணை நீதிமன்றங்களும் விரைவில் விசாரணைகளை நடத்தி குற்றப் புலனாய்வுப் பி்ரிவின் மூலம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.