வலி வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பில் மாவை ஜனாதிபதியிடம் கோரிக்கை
வலி வடக்கின் காணிகளை விடுவிப்பதான அறிவித்தல் காலம் நிறைவுற்றதனை ஆவலுடன் மக்கள் எதிர்பார்ப்பதனால் அவற்றினை விடுவித்து உதவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனாவிடம் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.
துரையப்பா விளையாட்டரங்கித் திறப்பு விழாவிற்காக யாழ். வந்த ஜனாதிபதி ஆளுநர் செயலகம் சென்ற சமயம் அங்கு ஜனாதிபதியை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா வலி வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த சந்திப்பில் வலி வமக்கு தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுத் தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வலி வடக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என அறிவித்தல் காலம் நிறைவுற்றதனை அடுத்து அப் பிரதேசத்தில் குடியமர எமது மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதனால் அவற்றினை முழுமையாக விடுவித்து உதவ வேண்டும் . ஏனெனில் மேலுமொரு 700 ஏக்கர் நிலமே உடன் விடுவிக்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.
அவ்வாறு பகுதி பகுதியாக சிறு நிலங்களை விடுவிப்பதனால் குறித்த பகுதி மக்கள் மன விரக்தியடைந்த நிலையில் உள்ளதோடு தமது நிலங்களை வேண்டி அடுத்த கட்ட போராட்டங்களிற்கும் தயாராகின்றனர். எனவே இவற்றினை கருத்தில் கொண்டு நீங்கள் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் மக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
இவற்றை செவி சாய்த்த ஜனாதிபதி இவற்றிற்கு பதிலளிக்கும்போது இவை தொடர்பில் கொழும்பில் விரைவில் ஓர் முடிவு எட்டப்பட்டு தெரியப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்தார் எனத் தெரிவித்தார் .