உதயங்க வீரதுங்கவை கைது செய்யவா, உக்ரேயன் உடன்படிக்கை?
ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதயங்க வீரதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல், உக்ரேயன் கிளர்ச்சியாளர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தல், தூதரக அதிகாரி ஒருவரை கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உதயங்க மீது சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கொள்ளும் வெளிநாட்டு விஜயங்களில் உதயங்க பங்கேற்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் நோக்கில் அரசாங்கம் உக்ரேய்ன் அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட உள்ளது. உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் உக்ரேய்ன் விஜயம் செய்ய உள்ளார்.
உக்ரேய்னுடனான உடன்படிக்கை குறித்த அமைச்சரவை பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் உதயங்கவை உக்ரேய்னிலிருந்து இலங்கை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், எந்தவிதமாக குற்றச் செயல்களிலும் தாம் ஈடுபடவில்லை எனவும், அரசியல் ரீதியாக பழிவாங்க இந்த அரசாங்கம் தம்மீது குற்றம் சுமத்துவதாகவும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.