Breaking News

இனி இந்தியாவிடம் இழக்க என்ன இருக்கிறது? ஜெரா

மீண்டுமொருமுறை துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்டள்ளது. இது எத்தனையாவது முறையென்று நினைவில்லை, ஆனால் அரசியல் முக்கியம் கருதி மீளமீள, மினுமினுக்கித் திறக்கப்பட்ட ஏ9 சாலைக்கு அடுத்த நிலையில் இருப்பது இந்தத் துரையப்பா விளையாட்டரங்குதான்.


வடபுலத்தின் அறிவுசார் – பொருளியல்சார் – பண்பாடுசார் மையம் எதுவெனில், அது யாழ்ப்பாணம் என்றே அனைவரும் குறிப்பிடுவர். எனவே யாழ்ப்பாணத்தில் நடக்கும் மாற்றங்கள் வடக்கிற்குரியது. வடக்கில் நடக்கும் மாற்றங்கள் மொத்த ஈழத்தமிழர்களுக்குமுரியது என்ற பொதுப்புத்தி பலமாகவே உண்டென்பதையும் இவ்விடத்தில் நினைவிற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஈழத்தமிழரின் அடையாளமாகவிட்ட யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க மையங்களுக்கு குறுதி கொப்பளிக்கும், வரலாறு உண்டு. உதாரணமாக யாழ்ப்பாண கோட்டை, யாழ். யாழ்.பல்கலைக்கழகம், நல்லூரடி, துரையப்பா விளையாட்டரங்கு எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். இப்பாரம்பரிய மையங்களின் இன்றைய நிலையென்ன என்று பார்த்தால், எதுவும் தமிழர்களின் வசதில்லை எனத் தெரியவருகின்றது. குறிப்பிடும் இடங்களின் பௌதீக சூழலில் தமிழர்கள் வாழ்கின்றனர். சில கச்சான் கடைகளை நடத்துகின்றனர். போரில் அவையங்களை இழந்தவர்கள் இச்சூழலில் பிச்சையெடுக்கின்றனர். அந்தந்த மையங்களை இயக்கும் அல்லது வைத்திருக்கும் அதிகாரம் தமிழர்களிடமிருந்து மர்மமான முறையில் பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்.கோட்டையில் இன்று தமிழர்களின் வசமில்லை. நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பெடுத்து, அதனைப் புனரமைத்து தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் தமிழ் மாணவர்களால் சுயாதீனமாக எவ்வித முடிவுகளும் எடுக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. இலங்கையில் தமிழர்கள் மட்டுமே கற்கும் ஒரேயொரு பல்கலைக்கழகம் – தமிழர் பல்கலைக்கழகம் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. யாழ்.நூலகத்தில் இந்திய அரசை விமர்சிக்கும், எதிர்க்கும் எவ்விதமான நிகழ்வுகளுக்கும் அனுமதியில்லை என்றொரு நிலையும் உண்டு.

நல்லூர் ஆலய சூழல் தனியாருக்குரியதானபடியினால், அதனை அவ்வளவு இலகுவாக யாராலும் ஆக்கிரமிக்க முடியாமல் உள்ளது. கடந்த வருடத்தில், நல்லூர் ஆலயத்தையும் உலக பாரம்பரிய மையங்களுக்குள் கொண்டு வந்து, ஐ.நாவின் யுனஸ்கோ தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சிகள் பற்றி பின்னர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அப்படி நல்லூர் யுனஸ்கோவின் உலக பாரம்பரியமிக்க மையங்களுக்குள் செல்லுமானால், தமிழர்கள் ஆலயச்சூழலில் ஒரு கல்லை நடுவதற்கும் அனுமதி பெறவேண்டிய நிலை உருவாகும்.
இறுதியாக துரையப்பா விளையாட்டரங்கு. முதல் பந்தியில் குறிப்பிட்டதுபோல பல தடவைகள் மினுக்கித் திறக்கப்பட்டிருக்கின்றது. துரையப்பா விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடந்ததை விட, களியாட்ட நிகழ்வுகள், வணிக விழாக்கள் நடந்த தடவைகள்தான் அதிகம்.

மகிந்த ராஜபக்சவுக்கு முந்தைய காலத்தில் தமிழர்கள் நடமாடவே அஞ்சும் பகுதியாக இது காணப்பட்டது. 2009க்குப் பின்னர், விளையாட்டரங்கப் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம் விலக்கப்பட்டது. ஆனால் மகிந்த யாழ்ப்பாணத்துக்கு வரும்போதேல்லாம், அப்போது அமைச்சராக இருந்த இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தன் பலத்தைக் காட்டுவதற்கு மக்களை ஏற்றிக் குவிக்கும் இடமாக இதனைப் பயன்படுத்தி வந்தார்.

இப்போது மீளவும் இந்தியா புனரமைத்து திறந்துவிட்டுள்ளது. இந்தத் திறப்பு விழாவுக்குப் பின்னால் இந்தியாவின் பூகோள அரசியல் வெற்றியிருக்கின்றது. இந்தியாவை தன் தேவைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, கழற்றிவிடும் போக்கையே இலங்கை ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்திருக்கின்றனர். ரணில் – மைத்திரி தலைமையிலான கூட்டு, அனுசரித்துப்போதல் என்ற நிலைப்பாட்டில், இந்தியாவை தாராளமாகவே இலங்கைக்குள் உள்நுழைய விட்டுள்ளமைக்கு ஆதாரமாகவே துரையப்பா விளையாட்டரங்கம் மீதான இந்திய ஆக்கிரமிப்பையும் பார்க்க வேண்டும்.

புதுடில்லியிலிருந்து இயக்கப்படும் மவுஸ் முனையின் அசைவுக்கு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து இயங்க வேண்டிய சூழல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதுவே மகிந்தவின் காலத்திலோ, அதற்கு முன்னரான பெரும்பான்மையின ஆட்சியாளர்களின் காலத்திலோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் ஆழமாகிவிட்டதை ஆட்சியாளர்கள் தெளிவாகவே உணர்கின்றனர். அதற்காகத்தான், இலங்கை நோக்கி நீளும் இந்தியாவின் ஆதிக்கத்தை தமிழர் பகுதிகள் நோக்கி பெரும்பான்மையினர் தள்ளிவிடுகின்றனர்.

இந்தியா, விமான தளம் அமைக்க பலாலியில் நிலமும், அனல் மின்நிலையம் அமைக்க சம்பூரில் நிலமும், பெருமளவில் அபகரிக்க எடுக்கப்படும் முயற்சிகளைத் தமிழர்கள் அறிவர்.

இதனைவிட இந்தியா தமிழர்களின் உளவியலுக்குள் ஊடுறுவும் முயற்சிகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றமையையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.

இப்போது யாழ்ப்பாணத்தின் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் இந்திய தூதுவராலய பிரதிநிதிகளை விருந்தினராகப் பார்க்க முடியும். இலங்கையில் இருக்கும் வேறெந்த நாடுகளினதும் தூதுவரலாய பிரதிநிதிகளுக்கு இவ்வளவு மேலான சமூக மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இந்திய தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் மேன்நிலை சமூகத்தினருடன் நேரடியாக இறங்கி பணியாற்றுவதன் விளைவுதான் இது. பட்டிமன்றங்கள் தொடக்கம், சிலை திறப்பு வரை இந்தியாவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாண புத்திஜீவிகள் வந்திருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் கூட அப்துல்கலாமின் சிலை நிறுவப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாமுக்கு சிலை வைத்தாயிற்று. சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கருக்கு விழா எடுக்கும் நிலைக்கு யாழ்ப்பாண அறிவுஜீவிகள் சமூகம் வந்திருக்கின்றது.

இந்தியாவின் தொன்ம பண்பாட்டு அடையாளங்களுல் ஒன்றாக யோகாசனக் கலை முன்வைக்கப்படுகின்றது. இன்று பௌத்தத்தைப் போல யோகாவும் தோன்றிய இடத்திலேயே மறையும் நிலையை எட்டியிருக்கின்றது. ஆனால் கடல் கடந்து அதனைப் பரப்புவதில் இந்தியா வெற்றிகண்டிருக்கின்றது என்றே குறிப்பிட வேண்டும். யாழ்ப்பாணத்தில் யோகா பிரகடன தினத்தில் 11 ஆயிரம் மாணவர்களை ஓரிடத்தில் திரட்டி, பயிற்சியளிக்க முடிகிறது. வேறெந்த நிகழ்வுக்கும் தமிழ் கல்வி சமூகம் இவ்வளவு தொகையான மாணவர்களை – அதுவும் விடுமுறை தினத்தில் அணிதிரட்டித் தருமா என்பதையும் கேள்வியோடு நோக்க வேண்டும்.

பாடசாலை கல்வி முறையிலோ, பாடப் புத்தகத்திலோ ஒழுங்குமுறையாக இடம்பெறாத யோகசனக் கலையை ஒருநாளில் மட்டும் பயின்று பூரண உடல்நலத்தைப் பேணமுடியுமா என்ற கேள்வி எங்கும் எழுப்பப்படவில்லை. யாரோ ஒருவரின் அதிகாரத்துக்குப் பணிந்து எந்தக் கேள்விகளுமற்று செயற்படுவது, தமிழர்களின் அடுத்த தலைமுறையினரையும் மந்தைகளாக்கவே வழிவகுக்கும்.

இவ்வாறு தமிழ் கல்வி சமூகம் செயற்படுவதன் அர்த்தம் என்னவெனில், தற்போதைய சிங்கள பெரும்பான்மையின ஆட்சியாளர்களைப் போல தமிழர்களின் அறிவுசார் சமூகமும் இந்தியாவின் கட்டுபாட்டின் கீழ் வந்துவிட்டது என்பதே.

இந்தியாவிடம், 30 வருடமாக தியாத்தின் – அறத்தின் வழியில் களமாடிய உரிமை போராட்டத்தை, அதன் பின்னர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் அரசியல் சக்தியை, தியாகங்களால் நிரம்பிய பாரம்பரிய இடங்களை, எங்கள் அடுத்த தலைமுறையின் ஆன்ம மனோதிடத்தை இழந்திருக்கிறோம்.

இனி இந்தியாவிடம் இழக்க என்ன இருக்கிறது..?

நன்றி - துளியம்