தனியார் காணிகளிலுள்ள இராணுவத்தை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளார் என சிறுவர் விவகார, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புனரமைப்புச் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டு மைதான திறப்பு விழாவுக்கு கடந்த சனிக்கிழமை வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் காணிகளில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தனியார் காணிகளில் நீண்ட காலமாக இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெருமளவிலான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
பலதடவைகள் இவ்விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டிய போதும் முன்னைய ஆட்சியாளர்கள் இதனைக் கருத்திலெடுக்கவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.
தனியார் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருக்கும் இடங்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு அவர் என்னிடம் கோரியுள்ளார். எனவே காணிகளின் விபரங்கள் விரைவில் கையளிக்கப்படும். விரைவில் இதற்கு நிரந்தரமான தீர்வொன்றை ஜனாதிபதி வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன் தற்போது வர்த்தமானி அறிவித்தலுடன் தனியார் காணிகள் சுவிகரிக்கப்பட்டு வருகின்றன. அக்காணிகளையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.