Breaking News

பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறினால் போராட்டம் வெடிக்கும்!



வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வேறுமாவட்டத்திற்கு மாறிச் சென்றால், அதற்கான முழுப்பொறுப்பையும் வட மாகாண முதலமைச்சரே ஏற்கவேண்டுமென, வவுனியா மாவட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டம் வேறு மாவட்டத்திற்கு சென்றால், வடக்கு முதல்வருக்கு எதிராக போராட்டம் வெடிக்குமென குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கம் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வவுனியாவில் விவசாயிகள் நீண்ட நாட்களாக தமது உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் சிறிய ஒரு இடத்தில், மக்களுக்கான சேவையை உள்ளுர் உற்பத்தி பொருட்கள் விற்பனையாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2016ஆம் ஆண்டு பாதீட்டில் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக நிதியொதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஜனவரி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான காணி தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிலையில் ஓமந்தையிலும், தாண்டிக்குளத்திலும் காணிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. எனினும் ஓமந்தை பொருத்தமில்லையென மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்து பொருத்தமான இடத்தில் காணி வழங்கப்படாவிட்டால் அநுராதபுர மாவட்டத்திற்கு இந்த திட்டத்தை நகர்த்தவுள்ளதாக எச்சரித்திருந்தது.

எனினும் வடக்கு முதலமைச்சரும், மாகாண விவசாய அமைச்சரும் தாண்டிக்குளம் காணி வழங்குவதற்கு தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வட மாகாணசபை அமர்வில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு தாண்டிக்குளம் காணியை வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆயினும் இம் மாதம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்த கருத்து, மீண்டும் இந்த செயற்திட்டம் வவுனியாவை விட்டு வேறு மாவட்டத்திற்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறந்தள்ளிய முதலமைச்சர், புதிதாக வேறு ஒரு இடத்தில் காணி தெரிவுசெய்யப்பட்டு பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் எந்த இடத்தில் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கூற மறுத்துவிட்டார். வுவுனியா பிரதேச செயலாளருக்கும் தெரியாமல், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தெரியாமல், வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கோ அல்லது மாவட்ட உள்ளுர் உற்பத்திப்பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தினருக்கோ தெரியாமல் முதலமைச்சர் எவ்வாறு வவுனியாவில் பொருத்தமான காணியை தெரிவு செய்துள்ளார் என்பது வியப்பாகவுள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு காணி வழங்க மறுத்தால், மன்னார் மாவட்டத்திற்கு திட்டத்தை நகர்த்தவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த செயற்திட்டமானது வவுனியாவை விட்டு மன்னாருக்கோ வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் வடக்கு முதல்வரே ஏற்கவேண்டும். அவ்வாறு நிகழுமாயின் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வவுனியாவில் வெடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.