இராணுவத்தினருக்கு தேவையற்ற காணிகள் 2018 இற்குள் விடுவிக்கப்படும்
2018 ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தின்
வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.
காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளில் மேலும் ஒரு தொகுதியாக 200 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தக் காணிகளில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்திற்குத் தேவையான காணிகளைத் தவிர மிகுதி காணிகளை படிப்படியாக மாதாந்த அடிப்படையில் அல்லது நாளாந்த அடிப்படையில் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிகளைக் கையளிக்கும் நடவடிக்கையானது ஒரு தொடர் நடவடிக்கையாகும் அது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது, என்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி.
இராணுவத்தினரின் தேவைபோக மிகுதிக்காணிகள் 2018 இற்குள் விடுவிக்கப்படும் என்றும் அவை எவ்வளவு தேவை என்பதை தற்போது கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மாத்திரம் 6,000 ஏக்கர் வரையில் பொதுமக்களின் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசம் இருப்பதாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காகச் செயற்பட்டு வரும் மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.