Breaking News

மோடி வாக்குறுதி அளித்தபோதும் இன்னமும் பேச்சுக்கள் தொடங்கவில்லை

சம்பூரில் திரவ இயற்கை எரிவாயு அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையில் எந்தப் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பூரில் 500 மெகாவாட் அனல் மின்திட்டத்தை அமைப்பதற்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்குமாறு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கடந்த மாதம், விடுத்த வேண்டுகோளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துமாறும், இந்தியப் பிரதமர் தமது அதிகாரிகளிடம் பணித்திருந்தார்.

இதையடுத்து, அனல்மின் திட்டம் சார்ந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும், இந்திய-இலங்கை அதிகாரிகளிடையே இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் திட்டம் குறித்து இந்திய அதிகாரிகள் மௌனமாக இருக்கின்றனர். இதுபற்றிய இறுதி முடிவு இந்திய- இலங்கை அரசாங்க உயர்மட்டங்களிலேயே எடுக்கப்படவுள்ளது,

அதேவேளை, இயற்கை எரிவாயு மின் திட்டம் அதிக செலவானதாக இருக்கும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் விலை தற்போது குறைவாக இருந்தாலும் அது எந்த நேரத்திலும் விண்ணைத் தொடும் அளவில் அதிகரிக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் பொருளாதார ரீதியாக, திரவ இயற்கை எரிவாயுவின் விலையும் அதிகரிக்கும்.

அதனால் இதனை அடிப்படையாக கொண்டு மின் உற்பத்தியை மேற்கொள்ளும் போது மின் பயனீட்டாளர்களுக்கு அதிக மானியத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.