பொருத்து வீட்டுத் திட்டத்தை கைவிட்டோம்-ஜனாதிபதி
வடக்கில் அமைக்கப்படவிருந்த 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த முக்கிய பிரமுகர்கள் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவெனவும், இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா எனவும் ஜனாதிபதியிடத்தில் வினாக்களை தொடுத்திருந்தனர்.
இச்சமயத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தை நாம் கைவிட்டுள்ளோம்.
வட மாகாணத்தில் சூழலுக்கு ஏற்ற வகையிலான மாற்றுத் திட்டமொன்றையே முன்னெடுக்கவுள்ளோம். அதுகுறித்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன எனக் கூறியுள்ளார்.
முன்னதாக குறித்த 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் பொதுமக்களுக்கு உகந்ததல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் தொடர்ச்சியாக கூறிவந்ததுடன், மாற்றுத்திட்டம் குறித்து ஆராயுமாறும் அரசின் உயர்மட்டத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர்.
இருப்பினும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது சில முட்டுக்கட்டைகள் இடப்படுவதனாலும் தாமதமானாலும் குறித்த வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இறுதியாக பாராளுமன்றில் நடைபெற்ற வடக்கு பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் இந்த வீட்டுத்திட்டம் குறித்து கடுமையான சாடல்கள் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியிடமிருந்து வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.